முன்னாள் தவிசாளர் தலைமையிலான குழுவினரின் சட்டவிரோத காணி பிடிக்கும் நடவடிக்கை

-மன்னார் நிருபர்-

தலைமன்னார் நடுக்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தலைமையிலான குழுவினர் மக்களின் காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற வீடியோ வெளியாகி உள்ளது.

மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடுக்குடா பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட குறித்த காணி பகுதியில் தனது வாகனத்தை கொண்டு வந்து வாகனத்தின் மின்குமிழ்களை ஒளிரச் செய்வது அதன் வெளிச்சத்தில் காணி அடைக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது அப்பகுதிக்குச் சென்ற குழுவினர் அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, கள்ள காணி பிடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில்,

தமது பூர்வீக காணிகளை அடாத்தாக பிடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

இதனால் எமது சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணி அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறது.

தற்போது எமது வாழ்வாதாரத்திற்கான பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக குறித்த காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது எங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருகின்றது.

எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு எமக்கு எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையிலே மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் தலைமையில் குறித்த காணிகள் சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு சுற்று வேலி அமைக்கப்பட்டு வருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கட்சியை சார்ந்த குறித்த மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்