-யாழ் நிருபர்-
தான் செய்த சிற்றுண்டியை தனது கணவர் சாப்பிடவில்லை என்ற தகராறில், பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்-சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த வினோத் வினிதா (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வேலையிலிருந்து வீடு திரும்பிய போது, அவர் கணவருக்கு தேநீரும் சிற்றுண்டியும் தயாரித்து வழங்கியுள்ளார்.
ஆனால், பெண்ணின் கணவரோ தேநீரை மட்டும் அருந்தி விட்டு சிற்றுண்டியை சாப்பிட மறுத்துள்ளார்.
எனினும், குறித்த பெண் தான் தயாரித்த சிற்றுண்டியை சாப்பிடுமாறு கணவரை வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் கணவர் தன் மனைவியை தாக்கியுள்ளார்.
அதன்பின் அவர் வீட்டை வெளியேறி, சிறிது நேரத்தின் பின் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.
கணவன் வீட்டை வெளியேறியதும் தனது உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு காத்திருந்த குறித்த பெண், கணவர் மீண்டும் வீடு திரும்பியதும் கணவரின் கண் முன்னே தனது உடலில் தீ மூட்டிக் கொண்டுள்ளார்.
குறித்த பெண்ணை அவரது கணவர் உடனடியாக மீட்டு, கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த பெண் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.