அரச வேலை வாய்ப்புகளும் தற்போதய சந்தை மாபியாக்களும்

-சௌமினி சுதந்தராஜ்-

1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்பு அரச வேலை வாய்ப்பு என்பது மக்களிடையே “கோழி மேய்க்க போனாலும் கௌவர்மெண்ட்ல மேய்க்கனும்” என்ற பழமொழி ஒன்றே உருவாக்கும் அளவிற்கு பிரசித்தம் அடைந்தது என்றே சொல்லலாம் அதற்கு காரணம் அனேகமாக ஓய்வூதியம் என்ற ஒன்றே.

கடைசி காலத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சோறு சாப்பிடனும் என்றால் அரசாங்க வேலை வேண்டும் என்று எமது சமூகத்தில் உள்ள வயது போனவர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.

அரச வேலை என்பது எமது நாட்டை ஐரோப்பியர்கள் ஆட்சி செய்த காலத்திலும் அதற்கு முந்தய மன்னர் ஆட்சி காலத்திலும் காணப்பட்ட ஒன்றே இது ஒன்றும் அவ்வளவு புதிய விடயம் இல்லை.

இதனை ஆழமாக ஆராய்ந்தால் தற்காலத்தில் மேற்குலக நாடுகளில் இருப்பவர்கள் அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பது இல்லை என்பதே உண்மை. காரணம் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் வளர்ச்சி அடைந்து வரும் அத்தனை நாடுகளும் தனியார் மயப்படுத்தப்பட்டவை எனலாம்.

ஆம் எமது நாட்டில் தான் படித்து பட்டம் பெற்றால் அரச வேலை வேண்டும் தரவில்லை என்றால் உடனே தெருவில் இறங்கி போராட்டம் நடத்தப்படுவது தற்போது பரவலாக ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

எமது நாட்டில் தற்போது வளர்ந்து வரும் சமூகம் அனேகமாக கல்வி கற்ற பட்டம் பெற்ற சமூகமாக தலை தூக்கி கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுரம் வருடாந்தம் இலட்சக்கணக்கில் வெளியேறும் பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக மாறி விட்டது.

ஒவ்வொரு வருடமும் வெளியேறும் பட்டதாரிகளுக்கு அரச வேலை வழங்கப்படுகின்றதா என்றால் அதில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கே வழங்கப்படுகின்றது. ஏனையவர்கள் பணிபுரிந்தால் அரச பணி இல்லையேல் வீதியில் போராட்டம் என்று ஒரு வகையில் அரசை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு கொண்டிருப்பதை காண முடிகின்றது. (இங்கு அரசு என்று குறிப்பிடுவது தற்போது உள்ள ஜனாதிபதியோ அல்லது இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களோ இல்லை அரசியல்வாதிகளை நாம் இங்கு கருத்தில் கொள்ளபோவதில்லை அரசாங்கத்தை தான் கருத்தில் எடுக்கின்றோம்.)

இப்படி எல்லாம் போராட்டங்கள் நடாத்தி ஒரு வழியாக அரச வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளுபவர்கள் அதற்கு பின்னர் மீண்டும் தெருவில் இறங்குகிறார்கள் சம்பளத்தை அதிகரி என்று கூறி இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இறுதியாக வேலையை பெற்று சம்பளத்தையும் அதிகரித்து பெற்று விடுகிறார்கள்.

அதற்கு பின்னர் நாட்டின் மொத்த உற்பத்தியின் வருடாந்தம் வெளியீட்டை கணக்கெடுத்தால் வருடத்தில் அரச துறையினரால் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கப்படும் பங்களிப்பிலும் பார்க்க தனியார் துறையினரால் வழங்கப்படும் பங்களிப்பு அதிகம் என்கிற அளவிற்கு நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் தேயிலை தோட்டங்கள், ஆடை ஏற்றுமதி, சிறு கைத்தொழில் பொருள் ஏற்றுமதி முக்கியமாக விவசாயம் காணப்படுகின்றது.

மேலே குறிப்பிட்டதைப்போன்று தனியார் துறையினரால் வருடாந்தம் மொத்த தேசிய உற்பத்தியில் ஈட்டப்படும் பங்களிப்பிலும் பார்க்க சராசரியாக அரச துறையினரால் வழங்கப்படும் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது.

அதற்கு உதாரணமாக எமது நாட்டின் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுதாபனம்,இன்னும் பல அரசக் கம்பனிகளை கூறலாம்.

இவற்றையெல்லாம் கடந்த தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது அரச தொழில் புரிவோர் தனியாரிலும் தொழில் புரிதல் என்பது சிக்கலான மிக பெரிய மாபியாக்களை உருவாக்க கூடிய அளவிற்கு உருவெடுத்துள்ளது.

தற்போது கல்வித்துறையிலும் சரி மருத்துவ துறையிலும் சரி முக்கியமாக இந்த இரண்டு துறைகளிலும் அரச பாடசாலை மற்றும் அரச வைத்தியசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களும் வைத்தியர்களும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் தனியார் வைத்தியசாலையிலும் சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

உதாரணமாக சொல்லப்போனால் தற்போது பேசு பொருளாக மாறியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா இந்த மாபியாக்களுக்கு இடம் கொடுக்காமல் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த நினைத்ததால் தான் சாதாரண மக்கள் தொட்டு படித்த சமூகம் வரையில் இப்படி ஒரு மாபியா கண்களுக்கு புலப்படாமல் இயங்கி வருகின்றமை தெரிய வந்துள்ளது.

ஆம் அரச பணி வேண்டும் என்று போராடி வேலை வாய்ப்பை பெறுகிறார்கள் சம்பளத்தை அதிகரிக்க கோரி போராடுகிறார்கள் இவற்றை எல்லாம் அரசு முழுமையாக இல்லை என்றாலும் ஓரளவேனும் பூர்த்தி செய்தாலும் இவர்கள் எதற்காக தனியார் கலவி நிலையங்கள் தனியார் வைத்தியசாலையில் சேவை வழங்குவதற்கு முற்படுகிறார்கள் என்பது இங்கு கேள்வியே?

இதில் குறைபாடாக சுட்டிகாட்டப்படும் விடயம் யாதெனில் அரச நிறுவனங்களில் பயன் பெற வருகின்ற சாதாரண பொது மக்களை தனியாருக்கு வர வைக்கும் அளவிற்கு ஒரு சிலரின் செயற்பாடுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் தற்போது உயர்தரத்திற்கு வந்தாலே மாணவர்கள் எந்த பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்பது என்பதை விட எந்த தனியார் நிறுவனத்திற்கு சென்று மேலதிக வகுப்புக்களில் கலந்து கொள்வது என்று ஜோசிக்கும் அளவிற்கு எமது சமூகம் மாற்றமடைந்துள்ளது.

இவற்றிற்கு அடிப்படை என்னவென்று ஆராய்ந்தால் பாடசாலைகளில் சரியான முறையில் கல்வி வழங்கப்பட்டால் மாணவர்கள் மேலதிக கல்வியை தேடி எதற்காக செல்ல வேண்டும் என்பதே இங்கு முன் வைக்கப்படும் கேள்வியாக உள்ளது.

இதனை சுருங்கக் கூறினால் அரச வேலை வேண்டும் என்று வீதிக்கு இறங்கியவர்கள் அரச வேலை தவிர்ந்து தனியாரில் சேவைகளை வழங்குகிறார்கள் தனியாரில் வழங்கும் சேவையால் திருப்தி அடைபவர்கள் தனியாரிலேயே பணியாற்றலாம் என்பதே இதன் சுருக்கம் எனலாம்.

இந்த கட்டுரை ஆசிரியரான எனது கருத்து யாதெனில்,

நாட்டில் எந்த பகுதியிலும் தனியார் துறையினர் வீதியில் இறங்கி போராடியது இல்லை.

இதில் அளவில் பாதிக்கப்படுவது அன்றாட தொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களே அவர்களுடைய சம்பளம் தற்போதைய விலைவாசிகளுக்கு ஏற்ப உள்ளதா என்றால் இல்லை என்பதே பதில்.

ஆம் பொருளியல் ரீதியான கண்ணோட்டத்தில் இவற்றை சற்று உற்று நோக்கினால் நாட்டில் குறிப்பிட்ட சாராரிடம் (நுகர்வோன்) அதிகளவிலான பணம் இருக்கும் போது தனக்கு தேவையான பொருட்களை அதன் விலையை விட அதிகம் கொடுத்து வாங்குவற்கு அந்த நுகர்வோர் தயாராக இருப்பார். இவர் இவ்வாறு குறித்த பொருளை கோரும் போது உற்பத்தியாளர் அதிக இலாபம் கருதி இதனைக் குறித்த அதிக பணம் வழங்க தயாராக உள்ள நுகர்வோனுக்கு வழங்கும் போது சந்தையில் குறித்த பொருளுக்கான விலை இயல்பாக அதிகரிக்க தொடங்கும். இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் மீண்டும் எமது மக்கள் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவர். இது தொடர்ச்சியாக சங்கிலி முறையில் இடம்பெற்றுக்கொண்டே செல்லும்.இதன் மூலம் சந்தையில் போலி பணவீக்கம் ஏற்படும்.

இவற்றில் எல்லாம் சிக்கி துன்பப்படுபவர்கள் நாளாந்தக் கூலி வேலை செய்பவர்களும் தோட்ட தொழிலாளர்களும் மீன் பிடியில் ஈடுபடுபவர்களுமே.

இதேவேளை இது அனைத்தையும் தாண்டி இலவச கல்வியை பெற்று அதன் பயனை பெற்ற சிலர் மேலே குறிப்பிட்ட செயற்பாடுகளில் ஈடுபடாமல் தங்களது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்