-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில், தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம், அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழாலை கிழக்கு, ஏழாலையை சேர்ந்த சிறீனிவாசன் பரமேஸ்வரன் (வயது 64), பரமேஸ்வரன் கஜதீபன் (வயது 23) என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை சென்று பார்வையிட்டு விட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் இருந்து நள்ளிரவுவேளை, பலாலி பக்கமாக வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, உரும்பிராய் சந்தியில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பட்டா ரக வாகனம் மோதியுள்ளது.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களது சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் தாயாரும், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.