-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில், தனது வியாபார நிலையத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
மலையடிக்கிராமம், சம்மாந்துறை என்ற முகவரியைச் சேர்ந்த, கலந்தர் லெப்பை ரமீஸ் (வயது 42) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், கோழிஇறைச்சி விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், நேற்று தனது கடையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கடையில் மின்கசிவு ஏற்பட்டு மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இதனை அவதானித்த அயலவர்கள், அவரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று, மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு, பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் சம்மாந்துறையில் பல பகுதிகளிலும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் பரவலாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
