மகரகம பொதுச் சுகாதார அதிகாரி (MOH) அலுவலகத்தின் கீழ் உள்ள நான்கு பொதுச் சுகாதார பரிசோதகர் (PHI) பிரிவுகளில், டெங்கு நுளம்பு பரவும் நிலைமை கண்டறியப்பட்ட 84 இடங்களுக்கு மொத்தமாக 21 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட இடங்களில் 65 வீடுகள், 18 வர்த்தக நிலையங்கள் மற்றும் ஒரு மத வழிபாட்டு நிலையம் அடங்குகின்றன. இவை கோடிகமுவ, பன்னிப்பிட்டிய, நாவின்ன மற்றும் வட்டகெதர பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.
கடந்த ஜூலை 3 முதல் 9 ஆம் திகதி வரை, அப்பகுதியில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நிலைமையை முன்னிட்டு சுமார் 4,200 இடங்களில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, 84 இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் நிலைமை இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு இடத்திற்கும் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பெறுமதி 21 ரூபா இலட்சமாகும்.
நுகேகொட நீதவான் நீதிமன்றம் ஒரே நாளில் விதித்துள்ள மிகப்பெரிய அபராதத் தொகை இதுவே என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேலும் 175 இடங்களுக்கு இறுதி எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களுக்குள் சுகாதார குறைபாடுகளை சரிசெய்யத் தவறினால், அவற்றுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.