நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகை 20 இலட்சத்தை தாண்டக்கூடும் எனச் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தற்போது 5 இலட்சம் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள முழுமையான இழப்பீட்டுத் தொகையின் ஒரு ஆரம்பக் கட்ட முன்பணக் கொடுப்பனவு மட்டுமே என ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடமையின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் இறுதிச் சடங்குகளுக்காக ஏற்பட்ட அனைத்துச் செலவுகளையும் சிறைச்சாலைகள் திணைக்களமே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் குறித்தும் திணைக்களம் தற்போது விசேட மறுஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது, என தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் இன்னும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.