அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில், வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

குறிப்பாக, சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழ கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் ஊஷ்ணத்தை தவிர்ப்பதற்காக, வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு, வெளி இடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பழ வகைகளின் தரங்களை பரிசோதிப்பதற்கு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய, சுகாதார பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தவிர, தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 150 ரூபாய் முதல் சுமார் 650 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன், இவை ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.