கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கிடையே விசேட கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்தமையால் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுனர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நிறுவப்பட்ட 45 உள்ளூராட்சி மன்றங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

மார்ச் 19 நள்ளிரவு முதல் நாட்டின் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளதால், அதன் அனைத்து நிர்வாக விவகாரங்களும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் பொறுப்பில் உள்ளன. உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்குச் செய்யும் பணிகளைத் தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, அந்த நிறுவனங்களின் நடவடிக்கையை பாதிக்கும் சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.

பொதுமக்களுக்கு சேவை செய்யும் போது பெறும் சம்பளத்திட்கு மேலதிகமாக சேவையை செய்ய வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதில் ​​மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண முதலமைச்சின் பதில் செயலாளர், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா, உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.