மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வீரர்களுக்கு கௌரவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தேசிய ரீதியில் வரலாற்று சாதனையினை முதல்தடவையாக பெற்றுக்கொடுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக தேசிய பயிற்றுவிப்பாளரும், சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளரும், இந்து கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியருமான வே.திருச்செல்வம் கலந்துகொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர், கல்முனை சிறைக்கூடத்தின் நிருவாக உத்தியோத்தர் உள்ளிட்ட மட்டக்களப்பு சிறைச்சாலையின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ், பணப்பரிசு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இச்சாதனையினை படைப்பதற்காக பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளர் வே.திருச்செல்வத்திற்கு சிறைச்சாலை அத்தியட்சகரினால் கௌரமளிக்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக ந.பிரபாகரன்   கடமைப் பொறுப்பை ஏற்றதன் பிற்பாடு தொடர்ச்சியாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பல்வேறு துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதுடன், அதிலும் குறிப்பாக விளையாட்டு துறையில் தேசிய சாதனைகளை நிலைநாட்டிவரும் நிலையில், அண்மையில் இடம்பெற்ற இலங்கை சிறைச்சாலைகளுக்கிடையிலான மல்யுத்த போட்டிகளில் 9 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 15 பதக்கங்களைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்று சம்பியனாக தெரிவாகியுள்ளனர்.

அத்தோடு இதே அத்தியட்சகர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் பிரதான ஜெயிலராக கடமையாற்றும் போது கடந்த 2018 ஆம் ஆண்டு இதே போன்றதொரு மல்யுத்த போட்டியிலும், தேசிய கராத்தே போட்டியிலும் தேசிய ரீதியாக முதல்முதலாக வரலாற்று ரீதியாக சாதனையை நிலைநாட்டி வடமாகாணத்திற்கு பெருமையினை பெற்றுக்கொடுத்த பெருமையும் இவரையே சார்ந்ததாக பலரும் பாராட்டியுள்ளனர்.

அதேபோன்று இம்முறை தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் மட்டக்களப்பு சிறைச்சாலை சார்பாக பங்குபற்றிய சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவபாலன் தேசிய ரீதியில் இலங்கை மல்யுத்த வீரர் குழாமில் இடம்பிடித்து இலங்கை சிறைச்சாலை திணைக்களத்திற்கும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன்இ இவருக்கும் இந்நிகழ்வின்போது கௌரவமளிக்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய ரீதியான போட்டிகளில் கபடி மற்றும் கராத்தே விளையாட்டுக்களில் தமது அணி முதலிடத்தினை கைப்பற்றும் எனவும் அதற்கான அனைத்து முயற்சிகளிற்கும்இ பயிற்சிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பை தான் வழங்குவதாக இதன்போது மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக ந.பிரபாகரன் கடமைப் பொறுப்பினை ஏற்ற நாள் முதல் மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக மாபெரும் இரத்ததான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மட்டுமல்லாது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை நிவர்த்திப்பதற்காக உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை திறந்தவெளி பண்ணையில் 20 ஏக்கருக்கு மேல் இயற்கை விவசாயத்தினை மேற்கொண்டு நெல் மற்றும் மரக்கறி வகைகளை சேதனைப்பசளை பாவனையூடாக சிறந்த விளைச்சலை அறுவடையாக பெற்று சமூக நலத்திட்டங்களை மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் நலன்புரிச்சங்கம் மற்றும் கல்முனை சிறைக்கூட உத்தியோகத்தர்கள் இணைந்து சிறந்த முறையில் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.