அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் நிலவும் முறைகேடுகள் குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஆதரவை அவுஸ்திரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவுக்குச் சேர வேண்டிய கடனை ‘ஹேக்கர்கள்’ திருடுவதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்தார்.
கணக்கு எண்கள் மாற்றப்படுவதை அறிந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் முறைப்பாடு அளித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் திறைசேரியால் அந்த முயற்சியைத் தடுத்ததாக தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் External Resources Department (வெளிநாட்டு நிதி பிரிவு) மூலம் வெளிநாட்டு அரசுகளுக்கு செலுத்த வேண்டிய சில நிதிகளில் அவுஸ்ரேலியாவிற்குச் சேர வேண்டிய 2.5 மில்லியன் டொலர் ஏற்கனவே ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது என்ற தகவல் வெளிப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, இவ்விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், திறைசேரியும் ஒரு குழுவின் மூலம் உள்ளகவிசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகாரிகளிடம் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனில் ஜெயந்த தெரிவித்தார்.
அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிதி முகமைக்கும் திறைசேரிக்கும் இடையே இணையம் வழியாகத் தகவல்கள் பரிமாறப்படுவதாகவும், ஹேக்கர்கள் குழு ஒன்று இந்த மின்னஞ்சல் தகவல்களை ஊடுருவி இந்த மோசடியைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணைகளை கூடிய விரைவில் நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சின் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹெக்கர்கள் மின்னஞ்சல் ஊடாக அமைச்சின் கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.