மலேசியாவில் வேலை பெற்றுதருவதாக மோசடி செய்த பெண் விளக்கமறியில்

சுற்றுலா விசாவின் கீழ் மலேசியாவில் வேலை வழங்குவதாக உறுதியளித்து ஒரு கோடிக்கு மேல் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி சுற்றுலா விசா மூலம் மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த குழுவொன்றின் ஆவணங்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகள் குறித்த குழுவிடம் மேலும் விசாரணை நடத்தியதில்இ அவர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வேலை தேடிச் செல்லத் தயாராக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, தங்காலையில் உள்ள பெண் ஒருவரே பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களின் பயணத்திற்கான விசாவை ஏற்பாடு செய்திருந்தமை கண்டறியப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்  புலனாய்வு அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர், ஆனால் அவர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அதிகாரிகள் விசாரணை தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு குறித்த பெண்ணின் மகனுக்கு அறிவித்தனர்.

அதன் பின்னர் அந்த பெண் தனது கணவருடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகத்தில் சரணடைந்தார்.

விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மோசடி செய்த பணத்தை மீள வழங்குவதற்கு சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.