சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் மயக்க நிலையில் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட 6வயது சிறுமி உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மார்த்தினி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்ப நிகழ்வு ஒன்றின் போது காணாமல் போயிருந்த நிலையில் இரவு மீட்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

ஞாயிற்றுக்கிழமை சிறிய காட்டுப்பகுதியை அண்டிய இடத்தில் இடம்பெற்ற குடும்ப விருந்து (Grill party) விழாவின் போது ஆறு வயது சிறுமி மாலை 5 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் இரவு 9.20 மணியளவில் சிறுமி மயக்கமடைந்த நிலையில்காட்டுப்பகுதியில் இருந்து மீட்க்கப்பட்டார்.

ராவூர் கொலனி (Ravoire) பகுதியில் குடும்ப கொண்டாட்டத்தில் பங்கேற்ற சிறுமி காணாமல் போனது குறித்து மாநில பொலிஸ் செயல்பாட்டு மையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5:54 மணியளவில் தகவல் கிடைத்தது. குடும்ப நிகழ்வின் போது அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மாலை 5 மணி முதல் காணவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள், பிராந்திய அவசர சேவைகளைச் சேர்ந்த 20 நிபுணர்கள், 20 தீயணைப்பு வீரர்கள், விமானப்படை மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தேடுதலின் பலனாக, இரவு 9:20 மணியளவில், ராவூர் கொலனிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மயக்கமடைந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் லொசானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தநிலையில் இச்சிறுமி திங்கட்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர் அலுவலகம், மாநில பொலிஸாருடன் இணைந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளது. மரணத்திற்கான காரணம் பற்றிய மேலதிகத் தகவல்கள் எவற்றையும் பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்