ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்வண்டியில் ஏற முற்பட்ட பெண்ணுக்கு பின்னால் சென்ற அவரது 3 வயது ஆண் குழந்தை பேருந்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதி காளிகோவில் வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி முதலாம் பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் றிகேஸ்வரன் (வயது 3) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது
குழந்தையின் தாயார் ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழில்சாலையில் வேலைபார்த்துவரும் நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிறுவனத்தின் பேருந்தில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து பஸ் வண்டியில் ஏற முற்பட்டபோது தாய்க்கு பின்னால் வந்த குழந்தை பேருந்தின் டயரினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சடலத்தை ஆரையம்பதி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.