சொகுசு படகு விபத்து : காணாமல் போனவர்கள் பட்டியலில் இலங்கையர் ஒருவரும்!

இத்தாலியின் சிசிலி தீவின் கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகிய உல்லாச பயணிகள் படகிலிருந்து காணாமல் போனவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்கள் இலங்கை, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் பிரித்தானிய தொழில்நுட்ப தொழிலதிபர் மைக் லிஞ்ச்சும் உள்ளடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காணாமல் போன அவரது மனைவி ஏஞ்சலா பேக்கரேஸ் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட 15 பேரில் ஒரு வயது பெண் குழந்தை ஒன்றும் அடங்குகின்றது.

சிசிலி கடல் மட்டத்திலிருந்து 164 அடி ஆழத்தில் உல்லாச படகின் இடிபாடுகளுடனான பாகங்கள் சிதைந்த நிலையில் உள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த பிராந்தியத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த உல்லாச படகில் பயணித்தவர்களின் உடமைகளை சேகரித்து மீட்புப் பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த பொருட்களின் மூலம் அவர்களை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்