Last updated on June 10th, 2024 at 11:55 am

மனைவிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்த கணவர்

மனைவிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்த கணவர்

சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று சித்திரவதைக்குள்ளான மனைவிக்கு நீதி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது

உயிரிழந்தவர் தம்புள்ளை அலகொலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்பதோடு, நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

உயிரிழந்தவரது மனைவி பொருளாதார நெருக்கடி காரணமாக தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டின் உரிமையாளர் இப்பெண்ணை மேலும் நான்கு வீடுகளுக்குப் பணிப்பெண்ணாக அனுப்பி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர், அப்பெண்ணை சித்திரவதை செய்து வந்ததோடு, உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

சித்திரவதைக்குள்ளான பெண், அவ்வீட்டின் பெண் உரிமையாளரிடம் இது தொடர்பாக கூற, 15 நாட்களுக்கு மேற்பட்ட காலம் உணவின்றி அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டார்.

பின்னர், அந்த பெண் தன் நிலையை பற்றி அந்நாட்டில் உள்ள தனது சகோதரியிடம் கூறியுள்ளார். உடனே அந்த சகோதரி சவூதி பொலிஸாருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், சவூதி பொலிஸாரினால் அந்த பெண் காப்பாற்றப்பட்டு, சகோதரியின் உதவியுடன் தாய்நாட்டை வந்தடைந்துள்ளார்.

அதையடுத்து, தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியதன் பின்னர், தனக்கு நடந்த அநீதியை அப்பெண் தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், இது தொடர்பாக கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்தும் மனைவிக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க