இலங்கையில் 50,000 வேலை வாய்ப்புகள்

38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 38 சுற்றுலா வலயங்களும் கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு பின்னவல மற்றும் கித்துல்கல பிரதேசங்கள் உட்பட பல பகுதிகளில் புதிதாக நிறுவப்படவுள்ளன.

அதன் ஊடாக கலிகமுவவை புதிய நகரமாக அபிவிருத்தி செய்து மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கன நுழைவாயிலில் இருந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, சம்பந்தப்பட்ட பிராந்திய சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள், கேகாலை மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் சுற்றுலாப் பாதையின் அபிவிருத்தி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சிகள் அதிகம் உள்ள சப்ரகமுவ பிரதேசத்தின் ஊடாக இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெருமளவிலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே பிரதான பணியாக அமையும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் முழுப் பிரதேசத்தையும் சுற்றுலா நகரமாக மாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்