விவசாய உள்ளீடுகளுக்கான விலையினை குறைக்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்கார அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன் போது அதிகார சபையின் செயலாளர் ஜெயானந்தன் நிறஞ்சனகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

அண்மையில் விவசாய பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெல் விலை தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. தற்போது நாட்டில் அதிகமான பிரதேசங்களில் நெல் அறுவடை இடம் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் அறுவடை இடம்பெற்றுவருகின்றது. அது மட்டுமல்லாது இந்த வருடம் நாடு முழுவதும் பாரிய வெள்ளத்தினால் விவசாயிகள் பல தடவைகள் நஸ்டப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கும் போது இந்த அரசாங்கத்தை நம்பித்தான் மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். அதனால் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில்கொண்டு விவசாய உள்ளீடுகளுக்கான விலையினை குறைத்துத்தருமாறு கேட்கின்றோம்.

அதே வேளை நெல்லை 120 ரூபாயிற்கு கொள்வனவு செய்ய அறிவிக்கின்றனர் ஆனால் அரிசியின் விலை 220 ரூபாய் என அறிவிக்கின்றனர் அப்படியானால் மேலதிகமான 100 ரூபாய் யாருக்கு போகின்றது. உண்மையில் அரிசி ஆலை உரிமையாளர்களின் செலவை சேர்த்தால் 158 ரூபாதான் செலவாகப் போகின்றது. இலாபத்தையும் சேர்த்து பார்த்தால் 175 ரூபாய் தான் செலவாகப் போகின்றது. ஆனால் கிட்டத்தட்ட 40 ரூபாய் யாருக்கு போகின்றது என தெரியாத நிலையே உள்ளது.

அரசாங்கம் உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கா விட்டால் கடந்த காலத்தில் இந்த நாட்டில் எப்படி பிரச்சனைகள் ஏற்பட்டதோ, அதே போல் பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பதையும் விவசாயிகள் சார்பில் சொல்லிக் கொள்கின்றோம் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்