நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள நிலையில், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கு விமானம் மற்றும் தொடர்புடைய மீட்பு பணியாளர்களை அனுப்புவதற்கு இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அனார்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் ஏனைய பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார்.
இரத்மலானை, கட்டுநாயக்க, ஹிங்குராங்கொட மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படைத் தளங்களில் இலங்கை விமானப்படையின் விமானங்களும் , உலங்குவானூர்திகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகளுக்காக விசேட குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.