மக்கள் வங்கி தனது வரலாற்றில் இதுவரை ஈட்டிய அதிகூடிய இலாபத்தை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளதாகவும், இலங்கை வங்கி தனது 87 வருட வரலாற்றில் அதிகூடிய இலாபத்தை 2025 இல் ஈட்டியுள்ளதாகவும், தேசிய சேமிப்பு வங்கி அனைத்து வரிகளுக்கும் முன்னர் 59 பில்லியன் ரூபா உயர் இலாபத்தை 2025 இல் பதிவு செய்துள்ளதாகவும் அந்த வங்கிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்த போதே வங்கித் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால் ஆகியோர் வருடாந்த அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, மக்கள் வங்கி தனது வரலாற்றில் இதுவரை ஈட்டிய அதிகூடிய இலாபத்தை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அந்த இலாபம் வரிக்கு முன்னர் 64.4 பில்லியன் ரூபா எனவும், வரிக்குப் பின்னர் 40 பில்லியன் ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா சுட்டிக்காட்டுகையில், இலங்கை வங்கி தனது 87 வருட வரலாற்றில் அதிகூடிய இலாபத்தை 2025 இல் ஈட்டியுள்ளதாகவும், அது அனைத்து வரிகளுக்கும் முன்னர் 120.8 பில்லியன் ரூபா இலாபம் எனவும் தெரிவித்தார். மேலும், வரிகளாக 77 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால் தெரிவிக்கையில், தேசிய சேமிப்பு வங்கி அனைத்து வரிகளுக்கும் முன்னர் 59 பில்லியன் ரூபா உயர் இலாபத்தை 2025 இல் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், தேசிய சேமிப்பு வங்கியின் இலாபப் பங்காக திறைசேரிக்கு 6 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.