யோஷித ராஜபக்ஷ பணத்தை எவ்வாறு பெற்றார் என்பது குறித்து 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு நியாயமான விளக்கத்தை வழங்கத் தவறியதால், பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பணம் நிலையான வைப்புத்தொகை மற்றும் வங்கி வைப்புத்தொகைகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும், இந்தக் கணக்குகள் டெய்சி ஃபாரஸ்ட் என்ற நபருடன் கூட்டுக் கணக்காகப் பராமரிக்கப்பட்டு வருவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் டெய்சி ஃபாரஸ்ட் என்ற பெண்ணை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண்ணுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் பணமோசடி சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இது தொடர்பாக அனைத்து சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவார்கள் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.