யாழ். போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம்

-யாழ் நிருபர்-

யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், ‘மோசமான நிதி நிர்வாகத்தால் மனித உயிர்களை பலி கொடுக்கபோகின்றோமா?’ என்ற கருப்பொருளில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

நோயாளர்களுக்கான அத்தியாவசிய மருத்துப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் குருதி சுத்திகரிப்பதற்கான மருத்து தட்டுபாடு நிலவுகின்ற நிலை அதனை தீர்க்க தகுந்த வழிமுறையினை பெற்றுத்தரக்கோரி இன்று குறித்த கண்டன கவனயீர்ப்பு போராட்டம் யாழ். போதனாவைத்திய சாலையின் முன்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் ஆ.மதிவாணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலையின் உபதலைவர் வைத்தியர் பி.மயூரன் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், வைத்திய குழுவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமக்கான நீதியினை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச மருத்துவம் ஆபத்தில், அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசியமான மருத்துக்கள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது, மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை மக்களின் உயிர்களுடன் விளையாடவேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை எந்தி தமது கண்டனத்தினை வெளியிட்டனர்.