யாழ். பல்கலைக்கழத்தின் சகல கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன், விடுதிகளில் தங்கி நிற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் பரீட்சை மற்றும் அத்தியாவசிய ஆய்வு நடவடிக்கைகளுக்காக மருத்துவ பீடத்தின் இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் உள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும்இ மாணவர்களின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கமைய சாவகாசமாக விடுதிகளை விட்டு வெளியேறுவதற்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.