-அம்பாறை நிருபர்-
காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பினால் வயல் வெளியில் காவலுக்கு நின்றவர் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
சம்பவ தினம் மாலை அறுவடை செய்யப்பட்ட வயல்வெளியில் மாடுகளை மேய்ப்பதற்காக காவலுக்கு சென்ற நபரை திடிரென யானைகள் சுற்றி வளைத்ததுடன் குறித்த நபரை தாக்க முயன்றுள்ளன.
உடனடியாக செயற்பட்ட அந்நபர் அருகில் உள்ள உயரமான இடமொன்றில் ஏறியுள்ளார்.எனினும் குறித்த நபரை விடாது துரத்திய யானைகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டன.இதே வேளை தகவலை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து வெடி பொருட்களை பாவித்து யானைக் கூட்டத்தை பின்வாங்க செய்ததுடன் ஆபத்தில் இருந்த நபரையும் மீட்டுள்ளனர்.
தற்போது இப்பகுதியில் 200 க்கும் அதிகமான யானைகள் பட்டி பட்டியாக வருகை தருவதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன.