-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளையும்,குறைநிறைகளை கேட்டறிவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று வியாழக்கிழமை மாலை மூதூருக்கு வருகை தந்தார்.
மூதூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற மீனவர் சமூகத்துடனான சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ,தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச அமைப்பாளர் எம்.கே.எம்.சப்றான் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மீனவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் சுட்டிக்காட்டி இருந்தனர்.கேள்விகளுக்கு அமைச்சரினால் பதில்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றுகையில்,
எமது அமைச்சு எடுத்துக் கொண்டால் எல்லா வகையிலும் உடைந்த நிலையில் காணப்படுகிறது.இதனால் எமது அமைச்சை புணர்நிர்மானம் செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.எல்லா நிறுவனங்களும் கடனில் மூழ்கிப் போய் காணப்படுகின்றன.ஒரு சில நிறுவனங்கள் சம்பளம் கொடுக்க முடியாமல் காணப்படுகின்றன.அந்த வகையில் காணப்படுகின்ற. நிறுவனங்களோடு தான் எமது மீன்படி அமைச்சு பயணிக்க வேண்டி இருக்கிறது.
நாம் எல்லோரும் சொல்வது போன்று லஞ்சம் ஊழலில் அரசு நிறுவனங்கள் காணப்படுகின்றது என்று.அவ்வாறுதான் எமது அமைச்சும் மாற்றம் கிடையாது.அதனால் மலிந்து போய் கிடக்கின்ற ஊழல் மோசடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.
நாம் ஆட்சி பீடமேறிய கடந்த மூன்று மாதங்களாக தேர்தல் , வரவு செலவுத் திட்டம் என்ன நாம் இதில் மூழ்கிக் காணப்பட்டோம்.இதனால் எமது அமைச்சிகளுடைய சேவைகளை சீராக செய்ய முடியாமல் போனது.
மே மாதம் 6 ஆம் திகதிக்கு பிறகான அண்மைக் காலங்களில் தேர்தல்கள் கிடையாது.இதனால் அதற்குப் பிறகு எமக்கு வேலைகளை செய்ய முடியும், எனவும் தெரிவித்தார்.


