-மூதூர் நிருபர்-
தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதன்முதல் தோப்பூர் பிரதேசத்திற்கான களப்பயணத்தை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் செல்வரெத்தினம் பிரகலாதன் இன்று செவ்வாய்கிழமை மேற்கொண்டார்.
தோப்பூர் பிரதேசத்தினது குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பொதுமக்களால் பிரச்சினைகள் எழுந்துள்ளன.இதனால் கடந்த ஒரு மாதகாலமாக பிரதேச சபையினால் கழிவகற்றல் பணி தடைபட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு முதல் தோப்பூர் பிரதேச குப்பைகள் ஏற்கனவே கொட்டப்பட்ட தோப்பூர் -இக்பால் நகரிலுள்ள இடத்தினை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இந்த இடத்தில் குப்பை கொட்ட முடியுமா என்பதை பிரதேச அமைப்புக்கள்,கிராம மக்கள்,இப்பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி முடிவெடுத்தால் அதற்கு ஏற்றால் போல் தன்னால் செயற்பட முடியுமெனவும் தவிசாளர் தெரிவித்தார்.
இக்கல விஜயத்தின் போது மூதூர் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.ஜெம்சித், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஜி.நிஸ்மி,எப்.பாஹிம், தோப்பூர் உப அலுவலக பொறுப்பு அதிகாரி எப்.அஸ்ரா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் செ.பிரகலாதன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது கள விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.