-மன்னார் நிருபர்-
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் மன்னார் பிரதேச பாவனையாளர்களுக்கான உள்ளக குடிநீர் விநியோகம் இன்று சனிக்கிழமை காலை முதல் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தடைப் பட்டுள்ளதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் மன்னார் பிரதேச பாவனையாளர்களுக்கான உள்ளக குடிநீர் விநியோகம் எவ்வித தடைகளும் இன்றி 24 மணி நேரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
எனினும் இன்று சனிக்கிழமை காலை முதல் குடிநீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தடைபட்டுள்ளது.
இதனால் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது,
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே குறித்த நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
தற்போது எமக்கு தேவையான எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் மன்னார் பிரதேச பாவனையாளர்களுக்கான உள்ளக குடிநீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.