மாணவர்கள் ஆசிரியர்களின் கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கிறார்கள்
-வவுணதீவு நிருபர் –
சமகாலத்தில் இளம் சமூதாயத்தினரை குறிப்பாக மாணவர்களை வாசித்தல் தேடலின் பால் நகர்த்துவதற்கு ஆசிரியர்களும் அதிபர்களும் கடும் முயற்சி எடுக்கின்றார்கள் ஆனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்களின் கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே போகின்றார்கள் என, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
சிறுகதை எழுத்தாளர் பரமேஸ்வரி இளங்கோவன் எழுதிய ” பொய்யெல்லாம் மெய்யென்று” நூல் வெளியீட்டு விழா ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா மணி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே. சித்திரவேல் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுஜாதா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி நூல்கள் ஒரு பொக்கிஷம் போன்றவை. ஆனால், வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களை மீளவும் ஒப்படைக்குமாறு கேட்கப்படும் பொழுது அந்த புத்தகங்கங்கள் திறந்து பார்க்கப்படாமல் புத்தம் புதிதாகவே மாணவர்களால் மீண்டும் ஒப்படைக்கப்படுவதை அவதானிக்கின்றோம்.
இது மாணவர்கள் இந்த புத்தகங்களைத் திறந்து கூடப் பார்க்கவில்லையா என்கின்ற கேள்வியை எழச் செய்கின்றது. இது கவலைக்குரியது. வாசிப்புப் பழக்கம் என்பது கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையிலேயே மாணவர்கள் உள்ளார்கள். இந்த நிலைமை மாற வேண்டும், மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நூல் நயவுரையை ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபரும் எழுத்தாளரும் , கவிஞருமான சுதாகரி மணிவண்ணன் நிகழ்த்தினார். நிகழ்ச்சித் தொகுப்பை மட்டக்களப்பு ஆசிரியர் மத்திய நிலைய விரிவுரையாளர் சுதாகினி டெஸ்மன் றாகல் வழங்கினார்.
நிகழ்வில், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, மற்றும் கல்வித்துறை சார்ந்த பல அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.