மரக்கறிகளின் விலை மேலும் உயர்வு

அண்மைய நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட பயிர் சேதத்துடன் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக, ஹட்டன் பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையினால், விவசாயிகள் மட்டுமின்றி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ பீன்ஸ் 600 ரூபாவாகவும், கரட் கிலோ 400 ரூபாவாகவும், மிளகாய் கிலோ 800 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 400 ரூபாவாகவும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, மரவள்ளிக்கிழங்கு, வெள்ளரி,  ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த பருவத்துடன் ஒப்பிடுகையில், பெரிய வெங்காயம் பயிர்ச்செய்கைக்கு அதிகளவு செலவு ஏற்பட்டதாலும், மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளாலும், அறுவடை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மீதமுள்ள விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்