கல்ஓயா பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை மீனகயா கடுகதி ரயிலில் யானைகள் மோதியதால் ரயில் தடம்புரண்டுள்ளதுடன் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராஜா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று புதன் கிழமை இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து பயணித்த கடுகதி ரயிலில் பொலநறுவை – ஹிங்கிரா கொடைக்கும் கல்ஓயாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் யானை மோதியதில் இன்று மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயில் 7 யானைகள் மீது மோதியது.இதில் 6 யானைகள் சம்பவ இடத்தில் உயிர் இழந்ததுடன் 5 யானைகள் பெண்யானைகள் என தெரிய வந்துள்ளது..
மேலும் இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி ரயிலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட ரயிலின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.