மட்டக்களப்பு கிண்ணையடித் துறையை கடப்பதற்கு மக்கள் அன்றாடம் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று கிண்ணையடி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி துறையை கடப்பதற்கு முறையான பாலம் இன்மையினால் இரண்டு தோணிகளை பொருத்தி பாதுகாப்பற்ற முறையில் உருவாக்கப்பட்ட பாதை போன்ற அமைப்பில் பயணித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பாதையை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அத்தியாவசிய தேவைகளின் நிமிர்த்தம் தாங்கள் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பாக தற்போது இடம்பெற்று வரும் அறுவடை நெல்லை சந்தைப்படுத்துவதற்கு குறித்த பாதை ஊடாகவே பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரிடம் கடந்த காலங்களில் தெரியப்படுத்தியும் உரிய தரப்பினர் இது வரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என எமது செய்தியாளரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர்.