மட்டக்களப்பு பிரதேசத்தில் நலிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட 6 வீட்டுத்திட்டங்களில் இரண்டாம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள் நேற்று புதன்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நிலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யுகே (BUDS UK)அமைப்பின் இலங்கைக்கான மட்டக்களப்பை மையமாக கொண்டு இயங்கும் பட்ஸ் பிடி ( BUDSBT) இணைந்து முன்னெடுத்த இந்த திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி அலன் கங்காதரன் நேற்று வழங்கி வைத்தார்.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 3 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வவுணதீவு பாவக்கொடிச்சேனை, ஆரையம்பதி, பனிச்சையடி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி அலன் கங்காதரன், மட்டு மாவட்ட செயலாளர் எஸ்.சசிதரன், அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.