மட்டக்களப்பு – மண்டூர் பகுதியில் வேளாண்மை செய்கை அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அதிகளவான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் எஞ்சிய வேளாண்மை விளைந்துள்ள போதிலும் அவற்றை அறுவடை செய்வதற்கு முன்னதாகவே யானைகள் அழித்து விடுவதாக விவசாயிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தமது நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டிய நிலமைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதால் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இரவு நேரங்களில் காவலில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை மட்டக்களப்பு படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள பல கிராமங்களை ஊடறுத்து 5 யானைகளைக் கொண்ட கூட்டம் உலாவி வந்துள்ளது. இந்நிலையில் கற்சேனைக் கிராமத்தினுள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த 3 காட்டு யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றையும், பயன்தரும் தென்னை, வாழை உள்ளிட்ட பயிரினங்களையும் அழித்து விட்டுச் சென்றுள்ளதாகவும், அந்த வீட்டில் வசித்து வந்த தாயும் மகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு – படுவாங்கரை பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக காட்டுயானைகளின் தொல்லைகள் காணப்படுவதுடன் யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருப்பதற்காக யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்