பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலையே என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஹங்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர், நாட்டின் தற்போதைய நிலைமை சீராக இருப்பதாக நம்பவில்லை.
கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்படுமாயின் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், அத்தகைய நிகழ்விற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போதைக்கு அத்தகைய சட்டமூலங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், அத்தகைய செயல்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக சில விடயங்களில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த சுய தணிக்கையை நிறுவலாம், என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.