-பதுளை நிருபர்-
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்துகொண்டிருந்த பேருந்தில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தில் பெல்மடுல்ல பகுதிக்கும் ஓபநாயக பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏறிய நபர் ஒருவரின் கைவிடப்பட்ட பை ஒன்றில் இருந்து சிறிய இரும்பு பெட்டி ஒன்றில் 9 mm ரக தோட்டாக்கள் 113,T 56 ரக தோட்டாக்கள் 9, 84 S ரக தோட்டா 01 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை 12.45 மணியளவில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேந்து ஒன்றில் பெல்மடுல்ல பகுதிக்கும் ஓபநாயக பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமான குறித்த நபர் பை ஒன்றுடன் பேருந்தில் ஏறி பையுடன் நின்று கொண்டு பயணித்துள்ளதாகவும் இதன்போது அருகில் அமர்ந்து பயணித்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த நபர் மீது சந்தேகமடைந்து அவரை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த அதிகாரியின் தொலைபேசிக்கு அழைப்பு வந்ததை அடுத்து குறித்த சந்தேக நபர் பதற்றமுற்ற நிலையில் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பேருந்து தேநீர் இடைவேளைக்காக ஊவதென்ன பகுதியில் பேருந்தை நிறுத்திய பின்னர் மீண்டும் பேருந்து பயணிக்கும் போது குறித்த சந்தேக நபர் பேருந்தில் பயணிக்கவில்லை என்பதுடன் சந்தேக நபர் கொண்டு வந்த பொதி பேருந்தில் இருந்ததையும் குறித்த ஓய்வு பெற்ற அதிகாரி அவதானித்துள்ளார்.
பின்னர் பதுளை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து பதுளை பொலிஸார் பண்டாரவளை தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து பண்டாரவளை நகரில் பேருந்து நிறுத்தப்பட்ட வேளையில் குறித்த பொதியினை பண்டாரவளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பதுளை மாவட்டத்து பொறுப்பான பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதிப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் பண்டாரவளை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.