அம்பாந்தோட்டை – சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்தெனிய மற்றும் சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்த 35 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் அவர்கள் பயன்படுத்திய வேன், முச்சக்கர வண்டி மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.