பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியும்

தேசிய ஜனநாயகக் கூட்டணி  மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சீதாமர்ஹி நகரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோயில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது.

சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும்.

ராமர் கோயிலுக்குச் செல்லாமல்,  ஒதுங்கிய எதிர்க்கட்சிகள் நிச்சயமாக சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியாது. சீதைக்கு யாராவது கோயில் கட்ட முடியும் என்றால், அது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும்,  என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில்,  சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20 ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்