பாம்பு தீண்டி உயிரிழந்த பெண் : தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

பசறை கோணக்கலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாம்பு தீண்டியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக இன்று திங்கட்கிழமை குறித்த பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கோணக்கலை தோட்ட 5 பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் இன்று  தோட்ட தொழிலுக்கு செல்லாது பசறை 10 ம் கட்டை பகுதியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 16 ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் தொழிலாளி ஒருவர் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் பாம்பு தீண்டி பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இவ்வேளையில் தோட்ட வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை பெற்று தருமாறும் தோட்ட பகுதிகளை துப்பரவு செய்து அங்குள்ள பாம்பு புற்றுகளை அகற்றி வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்து அங்குள்ள பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதிகளில் விடுமாறும் கூறியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மரணித்த பெண்ணின் சடலம் இன்று 3 மணியளவில் கோணக்கலை கீழ் பிரிவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்