இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 13 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இந்த விபத்துகளில் சிறுவன் ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய, ருவன்வெல்ல, கறுவாக்காடு (Cinnamon Gardens), தலங்கம, மாபாகே, கிராண்ட்பாஸ், நோர்வூட் மற்றும் மாஹோ ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.
குளியாப்பிட்டிய: புகல்ல சந்திக்கு அருகில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
ருவன்வெல்ல: அவிசாவளை – கேகாலை பிரதான வீதியில் பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில், ரம்புக்கனையைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கறுவாக்காடு: கொழும்பு J.O.C. சந்திக்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட இரு பெண்கள் மீது பேருந்து மோதியதில், கோட்டையைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.
தலங்கம: இரண்டு கார்கள் தொடர்புடைய விபத்தில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த கம்புறுகமுவையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பெண்ணும் காயமடைந்துள்ளார்.
மாபாகே: கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடதுபுறமாகத் திரும்ப முற்பட்ட பார ஊர்தி ஒன்று, துவிச்சக்கரவண்டியில் பயணித்த ராகமையைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸ்: ஆர்தர் டி சில்வா மாவத்தையில் லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில், களனியைச் சேர்ந்த 80 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நோர்வூட்: வென்ச்சர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கெப் வாகனத்தின் பின்புறத்திலிருந்து கீழே விழுந்த 13 வயதுடைய சிறுமி, டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாஹோ: நிகவெரட்டிய – சியம்பலங்கமுவ வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், மீரிகமையைச் சேர்ந்த 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இதேவேளை, இந்த எட்டு விபத்துகளில் ஏழு விபத்துகள் தொடர்பில் எட்டு சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த எட்டு விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










