-யாழ் நிருபர்-
13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பாதவர்கள் அதனை நடைமுறைப்படுத்த விரும்புபவர்களுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்று துறைப் பேராசிரியருமான சிவசுப்பிரமணியம் பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் இந்தியாவின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வை தலைமை தாங்கி கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான தொடர்பு காணப்படுகிறது.
இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சட்டம் நடைமுறைத் தன்மை குன்றியதாகவே காணப்படுகிறது.
ஜே.ஆர் காலத்தில் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறை அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் கரிசனை இலங்கையில் பதிமூன்றாவது திருத்தத்தை ஏற்படுத்துவதற்கு வழிகோலியது.
சிலர் 13 தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என கூறுகிறார்கள். நானும் 13ஐ முழுமையான தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்தியாவும் இதை இறுதித் தீர்வாகக் கூறவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும் பதின்மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் அதனை ஆரம்ப புள்ளியாக முன்னெடுக்க விரும்பாதவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வோருக்கு தடையாக இருக்கக்கூடாது.
தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் பதிமூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஓரணியில் நின்று இந்தியாவுக்கு தமது நிலைப்பாட்டை எடுத்துக்கூற வேண்டும்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற பதின்மூன்றாவது திருத்தத்தை உதறித் தள்ளினால் எல்லாமே சூனியமாகும், என அவர் மேலும் தெரிவித்தார்.