நேட்டோ அமைப்பில் இணையுமா பின்லாந்து

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன்னர் 30 சதவீதம் பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்திருந்தனர்.

போருக்குப் பின்னர் 60 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறி வரும் சூழலில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தேசியப் பாதுகாப்பு மறு ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டு நேட்டோ அமைப்பில் இணையலாமா வேண்டாமா என்பதைப் பின்லாந்து எம்பிக்கள் முடிவு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் சன்னா மரின் மேலும் கூறுகையில், “இது குறித்து ஆழமான விவாதம் நடத்தப்படும். அதேநேரம் சீக்கிரம் இதில் முடிவு எடுத்துவிடுவோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.