கடல் நீரில் உற்பத்தி செய்கின்ற உப்புக்கு 160 ரூபாவும், பல இலச்சம் ரூபா முதலீடுகளை செய்து விளைவித்த நெல்லுக்கு 120 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர் எனவே நெல்லின் விலை அதிகரிக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் இரண்டு தடவை வெள்ளம் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்துள்ளனர். சிவப்பு அரிசிமா, அரிசி மற்றும் புளி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் சிவப்பு அரிசிமா, சிவப்பு அரிசிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபா நிதி முறையான விதத்தில் பயன்படுத்தி இருந்தால் விவசாயிகளும் நன்மை அடைந்திருப்பார்கள். ஆகவே இவைகளை அரசாங்கம் கருத்தில் கொண்டு ஊழலை மட்டும் கருத்தில்கொள்ளாமல் தற்போதைய நாட்டின் இக்கட்டான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நெல்லின் விலையை அதிகரிக்க வேண்டும்.
இதேவேளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் மக்களின் வரிப்பணத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட பெரும் தொகுதியான நிதி முறையான விதத்தில் பயன்படுத்தி இருந்தால் விவசாயிகளும் நன்மை அடைந்திருப்பார்கள் ஆனால் கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்ட பல கோடி நிதிகள் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்