நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதனை மட்டுப்படுத்த அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி காரணமாக நுவரெலியா நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதாகவும் இது சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார்.
இதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையில், விரிவான சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை தயாரிப்பதற்கும், புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதனை ஒழுங்குபடுத்துவதற்கும் மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் செயலணியொன்றை அமைக்கவும் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.