பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமாகத் தோன்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு தோற்றி சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றதாகக் கூறி, ”லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) புகார் அளித்துள்ளது.
குறித்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.