நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளையில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஹட்டன், நோர்வூட் மற்றும் பொகவந்தலாவ பகுதிகளில் கடும் மழை பெய்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதிகளில் நிலவிய மிகவும் வறண்ட காலநிலை காரணமாக குடிநீர்ப் பிரச்சினை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.