-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட உப்புவெளி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் “பிடியளவு கமநிலத்துக்கு” எனும் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் வினைத்திறன் மிக்க விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் அரசாங்கத்தின் தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதி இன்று சனிக்கிழமை முத்து நகர் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உப்பு வெளி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் டீ.தர்சாநந்தன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வை உப்புவெளி கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் முத்து நகர் பகுதியில் உள்ள முத்து நகர் விவசாய சம்மேளனம், தகரவெட்டுவான் விவசாய சம்மேளனம், மத்திய வெளி விவசாய சம்மேளனம், அம்மன் குள விவசாய ஆகிய நான்கு விவசாய சம்மேளனங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயிரிடப்படாத வயல் நிலங்கள், மேட்டு நிலங்கள் போன்றவற்றை விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கான ஒரு ஊக்குவிப்பு திட்டமாக இது காணப்படுகிறது. இத் திட்டம் மூலம் உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டும் சகல கமக்காரர்கள், சொந்த காணி உரிமையாளர்கள், இருப்பாட்சியாளர்கள் ஆகியோர்கள் இதன் மூலம் பயனடைவதுடன் தேசத்தின் பசியை போக்குவதற்கும் நாளைய நாளில் செழிப்பான விலைச்சலை பெற்றுக் கொள்வதற்கும் இது உறுதுணையாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போது விவசாயிகளுக்கு குறித்த சட்ட திட்டங்கள் அடங்கிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க அனுமதி கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வின் போது உரையாற்றிய உப்புவெளி கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் டீ.தர்சானந்தன் வெற்றுக் காணிகளாக காணப்படும் விவசாய மற்றும் மேட்டு நிலக் காணிகள் கட்டாயமாக விவசாய செய்கைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் இல்லாத பட்சத்தில் பயிரிடப்படாத சந்தர்ப்பங்களில் சட்ட ரீதியாக அரசுடமையாக்கம் செய்யப்படலாம். எந்தவொரு ஏனைய நிறுவனங்களின் பிரச்சினைகள் காணி தொடர்பில் காணப்படுமாயின் எமது அலுவலகர்களை சந்தித்து தீர்வை பெறலாம் இவ்வாறான திட்டம் ஊடாக அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி துறையில் ஒரு பங்குதாரர்களாக மாறுங்கள் தொடர்ந்தும் உங்களது விவசாய செய்கை மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளை அதிகரித்து விவசாயத்தில் ஈடுபடுங்கள் என விவசாயிகளிடத்தில் மேலும் கோரிக்கை விடுத்தார்.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சட்டம் மற்றும் சேவை கிளைக்குரிய உத்தியோகத்தர் கே.நேமிநாதன் உட்பட விவசாய போதனாசிரியர்கள், விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.