கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக துப்பாக்கிதாரிக்கு உதவி செய்த இஷாரா செவ்வந்தி தலைமறைவாகிய நிலையில் அவரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி மேலும் தேவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பொதுவாக, உலகில் எந்தவொரு பொலிஸாராலும் குற்றங்களை மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்திலும், அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் வெகுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கப்படுமா என்று ஊடகவியலாளர்கள் வினவிய போது, இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க இயலாது என்று அவர் கூறினார்.