தெஹிவளை பகுதியில் முதியவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சமூக ஊடகங்களில் வைரலான இந்தச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி தெஹிவளை வைத்யா வீதியில் நடந்ததாகவும், அங்கு 74 வயது முதியவர் ஒருவர் தரையில் தள்ளிவிடப்பட்டு, அவரது சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2,100 கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதைத் தொடர்ந்து, பொலிசார் ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கினர்.
போலிசாரின் நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 5,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.
சந்தேக நபர் தெஹிவளையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.