இந்தியா – கடலூர் மாவட்டத்தில் திருமணமாகி 25 நாட்களில் கணவருக்கு மனைவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் ஷாலினி என்ற பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 26ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இதேவேளை குறித்த திருமணத்தில் மணப்பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளதுடன் திருமணம் முடிந்து முதல் இரவின்போது தான் இன்னொருவரைக் காதலிப்பதாக ஷாலினி கலையரசனிடம் கூறியுள்ளார். இதனால் ஷாலினியை அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்துவிடலாம் என்று இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பெப்ரவரி 20ஆம் திகதி ஷாலினி கலையரசனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்றும் இதனால் கலையரசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதேவேளை கடலூர் புதுச்சத்திரம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.