-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸாரை கடமையை செய்ய விடாது தடுத்த குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவெளி அடம்போடை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டின் பேரில் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து அதனை செலுத்தி சென்ற நபரை போக்குவரத்து பொலிஸார் கைது செய்ய முயன்றுள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞர் பொலிஸாரை தங்கள் கடமையை செய்ய விடாது தடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் 4 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.